-ஆ.ஈசுவரன்

நான் திருப்பூரில் கடந்த 64 வருடங்களாக இருந்தாலும் இன்று பார்த்தது போன்ற அழகிய இயற்கையை கண்டதில்லை! திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடம்! அழகான கலர் கலராக நெளிந்து ஓடும் வரிகளைக்கொண்ட கடினப்பாறை வகையைச்சார்ந்த பகுதி! அதன் பள்ளத்தில் ஓடும் சிறிய அளவிளான மழை நீர்! அதன் அடியில் துள்ளித்தெறித்தோடும் சிறிய மீன்கள்! தலைக்கு மேலே அடிக்கடி வட்டமிட்டு ஒளியெழுப்பும் ஆட்காட்டி பறவைகள்! கரிச்சான் குஞ்சுகள், கழுகுகள் என பறக்கின்றன.! பாறையிடுக்களின் நடுவில் முளைத்துள்ள காரைச்செடிகள்! பறவைகளின் இன்னிசை தவிர வேறு வாகன இரைச்சல்கள் கேட்கவில்லை! மாலை 5 மணிக்கு இந்த சுத்தமான பாறையின் மீது உட்கார்ந்தால் வெது வெதுப்பான சூடு! காலையில் இருந்த மாலை வரை சூடான பாறை மாலை நேரத்தில் லேசாக சூடு ஆறிக்கொண்டிருக்கிறது!

இப்படியொரு இடத்தில்” சூழல் அறிவோம்” என்ற குழுவினர் தங்கள் நிகழ்வினை நடத்துகிறார்கள்! உட்கார மேஜை நாற்காலிகள் கிடையாது! ஒளி பெருக்கி இல்லை! குழந்தைகள், பெண்கள், மற்றும் ஆண்கள் இந்த பாறையில் ஆங்காங்கே கொத்து கொத்தாக உட்கார்ந்து கொண்டுள்ளார்கள்! பெண் குழந்தைகள் தாங்கள் இந்த வாரம் படித்த இயற்கை சம்பந்தமான புத்தகத்தினை வாசித்துவிட்டு அது பற்றிய கருத்தினை பாறையில் நின்று கொண்டு கூற அதனை அனைவரும் செவிமெடுக்கிறார்கள்! குழந்தைகள் அதன் போக்கில் மரத்தின் இலைகளை கிள்ளுவதும், பாறைகளில் ஓடியாடி விளையாடுவதும் கண்கொள்ளாக்காட்சி!

உள் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்குகளில் இத்தனை குழந்தைகளும், பெண்களும் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான்! ஆனால் இங்கு ஈரோடு, கோபி, கோவை என அங்கிருந்து கூட பெண்கள் குழந்தைகளுடன் வந்துள்ளதைக்கண்டு அதிசயப்பட்டேன்..! இந்த இயற்கை நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் பிற மனிதர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்பது மற்றும் புரிந்தது.

இன்றைய நிகழ்விற்கு சூழல் எழுத்தாளர் திரு.ஆதிவள்ளியப்பன் அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தார். அவரின் 6 சூழல் புத்தகங்களை வாசித்த குழந்தைகள் அதன் கருத்து பற்றி எடுத்துக்கூறினார்கள். அவர் ஏற்புரை கூறினார். திருப்பூர் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், பறவையியல் நிபுணர் ஜெகனாதன் உட்பட சிறிய உரை நிகழ்த்தினர். சூரியன் மறைந்து இருள் கவ்வும் சமயம் பறவைகள் கத்துவதை அமைதியாக குழந்தைகள் கேட்டபின் எல்லோரும் கலைந்தார்கள்!

ஒரே ஒரு வருத்தம்! இந்த அழகிய இடத்தில் குடிமகன்கள் சிலர் குடித்துவிட்டு பாட்டில்களை அப்படியே வைத்துச்சென்றால் கூட பரவாயில்லை! ஆனால் காலிப்பாட்டில்களை பாறை மீது உடைத்து விட்டு செல்கிறார்கள்! அந்த பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் செருப்பில்லாமல் நடப்பது அபாயம் தான்! இத்தனை அழகிய இடத்தினை பாதுகாப்பது நமது பொறுப்புதான்!