வாவுப் பறவை

வெளவால்கள் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. வெளியீடு – பாரதி புத்தகாலயம், தொலைபேசி: 044 24332424, 24332924

Compare

வெளவால்கள் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

2 reviews for வாவுப் பறவை

  1. mhushain

    மனிதரைத் தாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்று உருவானால் உடனே நமது ஊடகங்கள் ஒரு வவ்வால் படத்தைப் போட்டு அதைச் செய்தியாக்குகின்றன. அந்தளவுக்கு நமது ஊடக அறிவு மழுங்கிக் கிடக்கிறது. மனிதர்களின் தவறை எந்த உயிரினத்தின் மீது சுமத்தலாம் என்று யோசித்தபோது வசமாகச் சிக்கியதுதான் இந்த வவ்வால். அதிலும் கொரோனா வந்த பிறகு சொல்லவே வேண்டாம். இந்நிலையில் வவ்வால் மீதான பழியை நீக்குவதோடு மட்டுமல்லாது அதுகுறித்த பல அறிவியல் உண்மைகளையும் விளக்குவதற்கு வந்துள்ள நூலே, ‘வாவுப் பறவை வௌவால்கள் – கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்’

    வாவுப் பறவை வவ்வாலின் அழகான மற்றொரு தமிழ் பெயர். வவ்வுதல் என்றால் பற்றிக்கொள்ளுதல். அந்த அடிப்படையில் வவ்வும் உயிரினம் என்பதால் இது வவ்வால் ஆனது என்று சங்க இலக்கிய விளக்கம் தொடங்கி வவ்வால்கள் குறித்த அண்மை கால அறிவியல் செய்திகள் வரை விரித்துத் தருகிறது இந்நூல். மேற்குலகம் வவ்வாலை ‘இரத்தம் குடிக்கும் காட்டேரியாக’ அச்சுறுத்தும் வேளையில் வவ்வால்களின் இயல்பு குறித்துச் சங்கப் புலவர்கள் நேர்மறையாகப் பாடியிருப்பது நிறைவாக உள்ளது.

    அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் ஒருவகை வவ்வால்களுக்குக் குருதியே உணவாகும்படி இயற்கை உருவாக்கியுள்ளது. அதிக அளவாக இரண்டு தேக்கரண்டி குருதி அவற்றுக்குத் தேவை. இரண்டு நாட்களுக்கு மேல் குருதியில்லாமல் அவைகளால் உயிர்வாழ முடியாது. அதுவும் விலங்குகளின் கழுத்தை எல்லாம் கடித்து உறிஞ்சாது. உடலில் கால் போன்ற பிற பகுதிகளில் துளையிட்டு அதில் வரும் குருதியை நக்கிக் கொள்கிறது. இதைதான் மனிதர்களின் கழுத்தைக் கடித்துக் குருதி உறிஞ்சும் ‘டிராகுலா’வாக மேற்குலகம் உருவகித்து வைத்துள்ளது. எந்த வவ்வாலும் மனிதர்களின் குருதியை உறிஞ்சுவதில்லை.

    ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னரே கொரொனா நச்சிலால் (வைரசால்) பரவும் சார்ஸ் வந்தபோதே உலகம் விழித்துக் கொள்ளவில்லை. இன்று கோவிட் 19 உலகெங்கும் பெருகியபோது பழிப்போட அது வவ்வால்களைத் தேடுகிறது. வவ்வால்களில் உடலில் காணப்படும் நச்சிலில் 30% கொரானா நச்சிலே நிறைந்துள்ளன. அதுவும் விலங்குவழி தொற்றகூடிய 15 நச்சில் குடும்பங்கள் இருப்பதாக இந்நூல் தெரிவிக்கிறது. இன்றைக்கும் நோய் தொற்றைப் பரப்பக்கூடிய நச்சில் வகைகளின் ஓம்புயிரியாக வவ்வால்கள் திகழ்கின்றன. அந்த வகையில் அவை நமக்குப் பேருதவியே செய்கின்றன. இருப்பினும் கோவிட் 19 வவ்வால்களிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் சான்றும் கிடைக்கவில்லை.

    அந்த நச்சில் வகைகள் மனிதர்களைத் தம் ஓம்புயிரியாக இடம் மாற்றிக்கொண்டால் அங்குத் தொடர்ந்து வாழ விரும்புகிறது. எனவே காடுகளை அழிக்கும் மனிதசெயற்பாட்டை நிறுத்தினால்தான் புதிய நுண்மிகள் மனிதருக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் நாவல் கொரொனா வகை மனிதர்கள் வழியாக மட்டுமே பரவியது என்கிறனர் அவர்கள்.

    நூலில் வவ்வால்களின் வகைகளைத் தெளிவாக அறிய வண்ணப்படங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இந்திய வவ்வால்கள் ஆய்வாளர்கள் பற்றிய தகவல்களையும் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் மேகமலையில் அமைந்துள்ள ஹைவேவி பகுதியிலுள்ள சலீம் அலி பழ வவ்வால் என்ற அரிய வகை வவ்வால் இந்தியாவின் சட்டபூர்வ பாதுகாப்பை பெற்ற ஒரே வவ்வால் என்பது போன்ற அரிய பல தகவல்களும் இந்நூலில் கிடைக்கின்றன.

    இங்குள்ள பாலூட்டிகளிலேயே மிகக் குறைவான அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்ட பாலூட்டி வவ்வால்கள்தான் என்ற வகையில் தமிழில் இந்நூல் வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. காட்டுயிர் ஆர்வலர்களுக்கு வவ்வால்கள் குறித்த ஒரு கையேட்டினை, அதுவும் தமிழ் மொழியில் தந்தமைக்கு ஆதி. வள்ளியப்பன் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். காட்டுயிர் குறித்த நூல்கள் தமிழில் தொடர்ந்து வெளிவர வாசகர்கள் அவசியம் இதுபோன்ற நூல்களை வாங்கிப் படித்து ஆதரவளிக்க வேண்டும்.

    நக்கீரன்

  2. mhushain

    கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்லப்படுகிறது. வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடுவதாலேயே நிஃபா வைரஸ் பரவுகிறதென்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். எபோலா, சார்ஸும்கூட வௌவால்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் கிராமப்புற வீடுகளின் பழைமையான பரண்களில் அங்குமிங்கும் ஓடித் திரிந்து கொண்டிருக்கின்றன வௌவால்கள். அமைதி குலைந்துவிடும் என்பதற்காக பட்டாசே வெடிக்காமல் வௌவால்களைப் பாதுகாக்கும் கிராமங்களும் இங்கே இருக்கின்றன. நிறைய கற்பிதங்களும் நம்பிக்கைகளும் வௌவால்கள் குறித்து இருக்கின்றன. வாவுப் பறவை என்பது சங்க இலக்கியங்களில் வௌவாலைக் குறிக்கும் சொல்.

    இந்த நூல், வௌவால்கள் குறித்த அப்படியான கற்பிதங்களைத் தகர்த்து அறிவியல் உண்மைகளைப் பேசுகிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் வௌவால்கள் பற்றிய குறிப்புகள் தொடங்கி, அவற்றின் உடலமைப்புகள், வகைகள், இனப்பெருக்கம் என அவற்றின் முழு வாழ்க்கைமுறையையும் சொல்லித்தருகிறது இந்த நூல். விதைப் பரவலுக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் வௌவால்கள் பெருமளவு உதவுகின்றன. மா, கொய்யா, பேரீச்சை, வாழை போன்ற பழத் தாவரங்களுக்கு வௌவால் பெரும் சேவை புரிகிறது. பழ வௌவால்களின் எச்சத்திலிருக்கும் விதைகள் மூலம் வெப்பமண்டலக் காடுகள் செழிக்கின்றன. உலகெங்கும் 300 வகைத் தாவரங்களை வௌவால்கள் பரப்புகின்றன. அதேநேரம் ரத்தத்தை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வௌவால்களும் இருக்கின்றன. மெக்ஸிகோ, தென் அமெரிக்க நாடுகளில் மூன்றுவகையான குருதியுண்ணி வௌவால்கள் வாழ்கின்றன… இப்படி வௌவால்களைப் பற்றி வியப்பூட்டும் ஏராளமான செய்திகள் இந்த நூலில் உள்ளன.

    வைரஸுக்கும் வௌவால்களுக்குமான தொடர்பு குறித்தும் இந்த நூலில் விரிவாகப் பேசுகிறார் வள்ளியப்பன். விலங்குவழி தொற்றக்கூடிய 15 வைரஸ் குடும்பங்கள் வௌவால்களில் வாழ்கின்றன. அவற்றில் 30 சதவிகிதம் கொரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் மனிதர்களைத் தாக்குவதற்கான காரணங்களையும் விவரிக்கிறது நூல். வௌவால்கள் பற்றிய புரிதலுக்கு இடையிடையே தரப்பட்டுள்ள கட்டச் செய்திகள் உதவுகின்றன.

    – வெ.நீலகண்டன்
    விகடன்

Add a review

Your email address will not be published. Required fields are marked *