ப. ஜெகநாதன்

“பார்ப்பதற்கும், கூர்ந்துநோக்குவதற்கும் என்ன வேறுபாடு?” சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரியில் இயற்கை குறித்த பயிலரங்கில் இந்தக் கேள்வியை மாணவர்களிடையே கேட்டபோது, அனைவரும் அமைதியாகவும், தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டும் இருந்தனர். தொடக்கத்திலேயே இந்தக் கேள்வியைக் கேட்டதால் ஒருவேளை கூச்சத்தால் யாரும் விளக்கமளிக்க முன்வரவில்லை போலும். அவர்களது விரிவுரையாளர்களும் அங்கே அமர்ந்திருந்ததால் சற்றுத் தயங்கியிருக்கக் கூடும். ஆகவே, எளிமையாகப் புரியவைக்க, “ ‘மெர்சல்’ படத்தில் விமானநிலையக் காட்சியில் நடிகர் விஜய் என்ன உடை அணிந்திருப்பார்?” என்று கேட்டேன். வகுப்பறையின் பல இடங்களில் இருந்து பதில்கள் வந்தபடி இருந்தன. “வேட்டி சட்டை” என்றார் ஒருவர். “பச்சை கலர் சட்டை, வெள்ளை வேட்டி” என்றார் மற்றொருவர். இன்னொருவர், “சட்டைக்கு உள்ளே அவர் வெள்ளை நிற முண்டா பனியன் போட்டிருப்பார்” என்றார். அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் பார்ப்பதற்கும், கூர்ந்துநோக்குவதற்கும் உள்ள வேறுபாடு.

அடுத்ததாக அந்த மாணவர்களிடம் நான் கேட்டது, “நடிகர் அஜித்குமார் நடித்த பத்து படங்களின் பட்டியல்”. எதிர்பார்த்தது போலவே பலரும் அவர்களுக்குத் தெரிந்த பெயர்களைச் சொல்லிக்கொண்டே போனார்கள். எனது அடுத்த கேள்வி, “உங்கள் கல்லூரி வளாகத்தில் தென்படும் பத்து மரங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.” மூன்று அல்லது நான்கு மரங்களுக்கு மேல் அதுவும் ஓரிருவரைத் தவிர யாரும் பதில் சொல்லவில்லை.

நமக்குப் பிடித்தவற்றைத்தான் நாம் சரியாகக் கவனித்து உள்வாங்குகிறோம். அப்படிக் கூர்ந்து கவனிப்பதாலேயே அவை நம் மனதிலும் பதிந்துவிடுகிறது. அந்த மாணவர்களின் குறையைச் சுட்டிக்காட்டுவதற்காகவோ, அவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதற்காகவோ அந்தக் கேள்விகள் கேட்கப்படவில்லை. இயற்கையைக் கூர்ந்துநோக்குதல் ஒரு நல்ல பண்பு. அதைப் புரியவைக்க கையாளப்பட்ட ஓர் உத்திதான் அது.

புறவுலகின்பால் நாட்டம் ஏற்பட்டால்தான் அவற்றைக் கூர்ந்துநோக்க முற்படுவோம், அதன் தொடர்ச்சியாக அவற்றைப் பாதுகாக்கவும் போராடுவோம். அந்த நாட்டத்தைப் பல விதங்களில் ஏற்படுத்த முடியும். நேரடிக் கள அனுபவம் ஒரு சிறந்த வழி. அதற்கு அடுத்ததாக கள அனுபவங்களின் பகிர்வுகளை அதைப் பெற்றவர்களின் வாயால் சொல்லக் கேட்பது. ஆயினும், நாம் பெற்ற அனுபவங்களைப் பலரிடமும் கொண்டுசேர்க்க சிறந்த வழிகளில் ஒன்று அவற்றைக் கட்டுரைகளாகப் பதிவுசெய்தல். மேலும் அது அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தாய்மொழியில் இருப்பது இன்னும் நல்லது. இந்த நூலின் நோக்கமும் அதுதான்.

குமரன் சதாசிவம் அவர்கள் தமிழ் வாசகர்கள் பலர் அறிந்திராத ஓர் இயற்கையியலாளர். புகழ்பெற்ற Marine Mammals of India (இந்திய கடல்வழ் பாலூட்டிகள்) என்ற நூலின் ஆசிரியர். ஆங்கில இதழ்களில் வெளியான அவரது இயற்கை சார்ந்த கட்டுரைகளுக்குத் தமிழ் வடிவம் தந்திருப்பது ஆதி வள்ளியப்பன் அவர்கள்.

இயற்கை ஒவ்வொரு நாளும் நமக்குப் புதிது புதிதாக அறிவையும், அனுபவங்களையும் பெற்றுத் தரும். இயற்கையின் விந்தைகளைக் கண்டு ரசிக்க வெகுதூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் மொட்டைமாடி, கொல்லைப்புறம் என எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் இயற்கையின் அங்கமான பறவைகளையும், பூச்சிகளையும் பார்த்து ரசிக்க முடியும். ஏன், நம் வீட்டுக்குள்ளேயே, நம்முடனேயே வாழும் பல்லி, சிலந்தி, பலவகையான பூச்சிகள் யாவையும் கூர்ந்துநோக்கினால் நம்மை வியப்பில் ஆழ்த்தும், சிந்தனையைத் தூண்டும் பல காட்சிகளை நாம் காணலாம். எனினும், நாம் அனைவரும் எல்லா அனுபவங்களையும் பெறுவது என்பது இயலாதது. ஆனால், இந்த நூலின் ஆசிரியர் தாம் அனுபவித்த ஒன்றை விவரிப்பதை ஊன்றிப் படிக்கும் போது நாமும் கிட்டத்தட்ட அந்த அனுபவத்தை மனதளவில் பெறுகிறோம்.

கானுலாவின் போது காட்டுப்பன்றியை நேருக்குநேர் சந்தித்தது, அழகர்கோயில் மலைப் பகுதியில் கண்ட பறவைகள், பூச்சிகள் குறித்த கள அனுபவம் சார்ந்த கட்டுரைகள், இமைகள் இல்லாத உயிரினங்கள் யாவை, அவை எப்படித் தூங்கும்? காயம்பட்ட காட்டுயிர்களின் நிலை போன்ற இயற்கையின் விந்தைகளையும், புதிர்களையும் விவரிக்கும் கட்டுரைகளையும், சிறுத்தை-மனிதர்கள் எதிர்கொள்ளல், இயற்கை பாதுகாப்பு குறித்துப் பேசும் கட்டுரைகளையும் உள்ளடக்கியது இந்த நூல்.

புள்ளிவிவரங்களையும், போதனைகளையும் மட்டுமே கொண்ட படைப்புகளால் இயற்கையின்பால் நாட்டத்தைக் ஏற்படுத்துவது கடினம். இயற்கையின் விந்தைகளை எளிமையாக, வியக்கத்தக்க வகையில் விவரிக்கும்போது அது படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். நாமும் இயற்கையைக் கூர்ந்துநோக்க வேண்டும், அத்தகைய அனுபவங்களைப் பெற வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும். இந்த நூல் அதற்கு நிச்சயமாக வழிவகை செய்யும்.

இயற்கையியலாளர் குமரன் சதாசிவத்தின் ஆங்கிலக் கட்டுரைகளை எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவை “இயற்கையைத் தேடும் கண்கள்” ‘காட்டின் குரல் கேட்கிறதா?’ என இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளது. அவற்றில் ஒன்றான ‘காட்டின் குரல் கேட்கிறதா? ‘எனும் நூலுக்கு எழுதிய மதிப்புரை.

கூடுதல் தகவல்களுக்கு